ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மாசு பற்றிய வெளி நாட்டினரின் ஆய்வு.

அன்புடையீர்,
                    வணக்கம். லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

             உலகளவில் இந்தியாவில் மட்டும் 200% வாகன உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும், தேவையோ, தேவையில்லையோ. வாகனம் வாங்குவது ,அதை உபயோகிப்பது என்பது அவசியமானது, கெளரவமானது என்று கற்பிக்கப்படுவதாய் ,அமெரிக்காவிலிருந்து வரும் வாகனங்கள் குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.  
                  இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கான வர்ணங்களால் பூமிக்கு அதிக வெப்பம் உண்டாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டைகளை உருவாக்குவதோடு ,தரைப்பகுதியில் காற்றோடு கலந்திருக்கும் ஓசோனோடு கலப்புற்று விஷத்தன்மை கொண்ட வாயுவாக மாறுவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.                                                            தோட்டப்பயிர்களையும்,தோப்புகளையும், சாலையோர மரங்கள் ,பசுமைவெளிகளையும் ,காடுகளையும் அதிகளவு இது தாக்குகிறது.  
                     சமீபத்திய ஆராய்ச்சி , இதை மீண்டும் மீண்டும் நிரூபித்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பூமி மாசடைதல், வெப்பமுறுதல் என்பதற்கான பலவிதமான காரணங்கள் கண்டறியப்பட்டாலும், இவ்வாறான ஒரு காரணம் தற்போது முதல் முறையாக அறிவியல் உலகு கண்டறிந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, ஒரு நிச்சயமற்ற, குழப்பமான தன்மையை அடைவதாய் கூறுகிறார், டாக்டர் ரோட்ரிக்ஸ் என்ற ஓசோன் ஆய்வாளர். இதை அரசும் ,மக்களும், தனியார் நிறுவனங்களும், பயன்பாட்டு மையங்களும் சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த ,உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையேல், மாபெரும் நாசத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
                                          குறைந்தளவு நேரமே, வளிமண்டலத்தில் ஜீவித்திருக்க கூடிய மாசு வாயுக்களான நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் அங்கக பொருட்களால் உருவாகும் வாயுக்கள், வளி மண்டலத்தை சூடேற்றுவதற்கு முக்கிய காரணமாய் அமைவதில்லை. அவற்றின் நேரடித் தாக்கம் குறைவே. ஆனால் அதன் உப விளைவு அபாயகரமானது. பசுமை குடில் வாயுக்களை உற்பத்தி செய்யும், மூலப் பொருட்களாகத் தன்னை மாற்றிக் கொள்கின்றன. இதனால், தாவரங்கள் ஒளிச் சேர்க்கையில் ஈடுபடும்போது, அதிகபட்ச கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கிறது. அது பூமிக்குள் சென்று வேர்கள் மூலமாக வேர் முடிச்சுகளாக சேமிக்கப்படுகிறது. இது ஓசோனின் முன்னோடியாக செயல்பட்டு ,பல வேதிவினை மாற்றங்கள் அடைந்து, வளி மண்டலத்தை வெப்பமடையச் செய்வதால் ,பசுமை மாறா தாவரங்கள், மரங்கள் போன்றவை பலியாகின்றன
                  டாக்டர் பில் கோலின், தனது ஆராய்ச்சி முடிவில், யாரும் ஓசோன் மாசுபடும் என்பதையும், அது இவ்வாறான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. இது நம் மக்களின் ஆசை, அறியாமையின் விளைவு என்றும் கூறலாம் என்கிறார். இதைத் தவிர நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx), கார்பன் மோனாக்ஸைடு(Co), மற்றும் அங்கக பொருட்கள்(VOC) போன்றவையும் இதே அளவு விளைவை உற்பத்தி செய்யும்,தற்போதைய நிலவரப்படி ,பூமியின் வட பகுதி இதனால் அதிகளவு வெப்பமடைந்துள்ளது. ஆய்வாளர்கள் இது குறித்து பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏனெனில் ,பல நாட்டு ஆய்வறிஞர்கள், இம் முடிவை முதலில் ஏற்கத் தயங்கினர். அவர்களுக்கு, "உறுதி செய்யும்" அடிப்படையில் பல கட்ட சோதனைகள் நடத்திக் காண்பிக்கப்பட்டது.
                               முதலில் பூமிக்குள் , மாசுபடுத்தப்பட்ட ஓசோன் வாயுவைச் செலுத்துகின்றனர். இதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பூமிக்குள் நடக்கும் வேதி வினைகளைக் குறித்துக் கொள்கின்றனர். உண்மையில் " இயல்பாக நிகழ்வது", எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் உட்பட்டது அன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுழற்சி முறையில் கார்பனானது ,எவ்வாறு ஓசோனைப் பல நிலைகளில் பாதிக்கச் செய்கிறது, இது எந்த முறையில் தாவரங்கள், மரங்களை ,பசுமை அமைப்புகளைப் பாதிக்கின்றது என்பதை,தயார் செய்யப்பட்ட மாதிரி சோதனைக் கலன்கள் மூலம் சோதிக்கிறார்கள் பல்வேறு அழுத்தத்தில்,பல்வேறு தாவரங்கள் மீது இது பீய்ச்சப்படுகிறது, இதன் மூலம், கார்பன் டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் உறிஞ்சப்பட்டு ,எந்தெந்த அளவீட்டில் ,பூமிக்குள் சேகரமாகி பாதிப்புக்கு உள்ளாக்குகிறது, என்பவற்றைக் குறித்துக் கொள்கிறார்கள். பின், மண் பரிசோதனை செய்யப்படுகிறது .பூமிக்கும், வளிமண்டலத்தில் படிமமாக இருக்கும் காற்றிற்க்கும் இடையே நடக்கும், கார்பன் பரிவர்த்தனை கணக்கிடப்படுகிறது. ஒரு வருடத்தில் , எவ்வளவு வாயு வெளியேற்றப்படுகிறது என்பது மிக முக்கியம்.  
               டாக்டர் கோலினின் ஆய்வுப்படி ,ஒவ்வொரு வாயுவின் தாக்கம் வெவ்வேறு அளவில் உள்ளது. உதாரணமாக கார்பன் டைஆக்ஸைடின் தாக்கம் வளிமண்டலத்தில் நீண்ட நாள் இருக்கும். ஓசோனின் தாக்கம் குறைந்த கால அளவே இருக்கும். இதைப் பல்வேறு கால கட்டங்களில் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பல்வேறு வகையான தாக்கங்கள் உருவாகி இருப்பது தெரிய வருகிறது. அதாவது, பூமியின் மீதான தாக்குதலின் வேகம், பல்வேறு அளவீடுகளைக் கொண்டுள்ளது.
                                   மற்றுமொரு வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடின் விளைவு, எல்லோரையும் ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. இதுநாள் வரை குளிரூட்டும் வாயுவாக நினைத்துக் கொண்டிருந்தது அறிவியல் உலகம். மீதேன் வாயுவால் ,வளிமண்டலத்தில் உண்டாக்கப்படும் சூடானது ,இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம் தாவரங்களையும், உணவுப்பயிர்களையும், மிகக் கொடூரமாகத் தாக்குவதை ,தற்போது தான் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். வளிமண்டலத்தில் வாயுவைக் கட்டுப்டுத்தும் வாயுவாக, இது நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தது தவறு என்பது போல ,அதி வேகமாக சூடேற்றும் வாயுவாகவும் இது செயல்படுகிறது! இவ்வாறான வாயுக்களால், உருவாக்கப்படும் தாக்கத்தை ,ஒன்றும் அறியாத, பசுமை அமைப்புகள் சுமந்து, பூமியின் மீதான இதன் தாக்கத்தை ,30--40 சதவீதம் குறைக்கின்றன. இதனால், வீடுகளில் செடி கொடிகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, சாலையோர மரங்களைப் பேணிக்காத்தல் ,காடுவளர்ப்பு போன்றவை அத்தியாவசியமாகிறது. எந்த அறிவியல் அமைப்பாலும், தடுத்து நிறுத்த முடியாத பங்களிப்பை, இந்தப் பசுமை அமைப்புகள் இயற்கையாகவே தந்து நம்மைக் காக்கின்றன.
                             ஸ்பீல் ராபின்சன் என்ற ஆய்வாளர், இவ்வாறான மாசு அதிகபட்சமாக நிலக்கரி சுரங்கங்கள் மூலம், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு, நீராவி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால் அதிகம் ஏற்படுகிறது என்கிறார். இதனால், மாசடையும் ஓசோன் வாயு ,சளி, ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு, சரும நோய்கள், போன்றவற்றிற்கு மூல காரணமாகிறது. வெளிநாடுகளில், மாசைக் கட்டுப்படுத்த ,கிராவி மெட்ரிக் இயந்திரம் உபயோகிக்கப்படுகிறது. இது 24 மணி நேரத்தில் உமிழப்படும், மாசு துகள்களை ஒன்று சேர்த்து, எடை போட்டு, குறிப்பிட்ட சில மணி நேரத்தில் அழிக்கின்றன. அதற்கு மாற்றாக நீண்ட புகை போக்கிகள் அமைத்து, அதில் லேசர் கதிர்கள் உமிழும் இயந்திரங்களைப் பொருத்தி, துகள்களை எரித்து ,அதை சில மாற்றங்களுக்கு உட்படுத்தி முற்றிலும் இல்லாமல் ஆக்குகின்றனர். பெரும் செலவு ஏற்படுத்தும் இவ்வாறான அமைப்புகள், எல்லோராலும் பொருத்தப்பட முடியுமா என்பது சந்தேகம்
              ஏழை மற்றும் வளரும் நாடுகள், இது தொடர்பான சட்ட திட்டங்களைக் கண்டு கொள்வதே இல்லை என்று புலம்புகிறது ஐநா நல அமைப்பு
                 குறிப்பாகக் சுரங்கங்களில் உற்பத்தியாகும் வாயுக்கள் குறித்து, தேவையான விழிப்புணர்வை அதன் உரிமையாளர்கள் கற்றுக் கொண்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தவிர, வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், வர்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தி, தங்களின் உற்பத்தியால் ஏற்படும் இயற்கையின் மீதான பாதிப்பு குறையுமாறு பார்த்துக் கொள்வது நலம் பயக்கும். உபயோகிப்பாளர்களான நாமும் ,நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், நம் நடவடிக்கைகளால் ,இயற்கைக்கு எந்த வித குந்தகமும் விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொண்டால் வருங்காலத்தைப் பயமின்றி வரவேற்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக