ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

எரிபொருட்களும் அமில மழையும்

அன்புடையீர்,
                        வணக்கம்.லோகு வாகன புகை மாசு பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
         
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                      பூமியைத் தாண்டி புதிய குடியிருப்புகளைத் தேடி மனிதன் சிறகு விரித்துப் பறக்கும் நேரம் இது. கற்பனைகளை எல்லாம் நிஜமாக்கும் அறிவியல் சோதனைகள், அற்புதக் கண்டுபிடிப்புகள் என்று மனிதனின் சாதனைகள் கற்பனையே செய்ய முடியாதது. ஆனால், இந்த வளர்ச்சிகளின் மற்றொரு பக்கம் மனித வாழ்வுக்கு எமனாக மாறிவருவது கதிகலங்க வைக்கும் உண்மை. 
மின் உற்பத்தி, வாகன உற்பத்தி  ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் மாசுக்களான கார்பன் மோனாக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு போன்றவை பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த நச்சு வாயுக்கள் வான மண்டலத்தில் மேகங்களில் கலந்து வருகின்றன. இதனால், சில இடங்களில் அமில மழையும், இன்னும் சில இடங்களில் மிகக் குறைந்த அளவு மழையும் பெய்யும் ஆபத்து உண்டு; இதனால் இந்தியாவும் அதைச் சார்ந்த சில நாடுகளும் பாதிக்க வாய்ப்புண்டு!-“ என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மேகத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?
                அமெரிக்க சைஸ் ஆகும்! 
இந்த கோதுமை நிற மேகம் தற்போது, இந்து மகா சமுத்திரத்தின் மீது மிதப்பதாய் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 
சில ஆண்டுகளுக்கு முன் கார்காலத்தில் இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு மேலாக குடை விரித்திரிருந்த நச்சு மேகம் தற்போது சற்று நகர்ந்து அமில மழை   பெய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி பெய்யும் மழையால் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டாகும். இந்த மேகங்கள் 10 விழுக்காடு சூரிய ஒளியைத் தடுத்துவிடுவதால்.. குறைந்த அளவு நீரே ஆவியாகும். அதனால், மழையின் அளவும் குறைந்துவிடும் 
இப்படி 99 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள நச்சு மேகம் விஞ்ஞானிகளை கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. 
மோட்டார் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல்தான்  இந்தப் பிரச்னைகளுக்கு மூலகாரணம்! பெட்ரோலுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் டீசல் 7 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தரம் குறைந்த டீசலில் கந்தகம் மிகுந்திருக்கும். இதனால் அதிகமாக புகை வெளிப்படும். சென்டர் ஃபர் சைன்ஸ் அண்ட் என்விராண்மென்டின் (சி.எஸ்.இ) இயக்குனர் பேராசிரியர் வி.ராமநாதன், “இண்டியன் ஓஷன் எக்ஸ்பெரிமெண்ட்’ (இண்டோ எக்ஸ்) தலைமை விஞ்ஞானி ஏ.பி.மித்ரா ஆகியோர் நடத்திய ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
                மேற்கு வங்கம், பீகார், கர்நாடகம் மற்றும் பல பகுதிகளில் அமில மழை பொழியும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலக்கரியைப் பயன்படுத்தும் ஆலைகளாலும், அனல் மின் நிலையங்களாலும் அதிக அளவு கந்தக நுண் துகள்கள் சுற்றுச் சூழலில் பரவுகின்றன. காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து கந்தக அமிலமாக உருமாறுகின்றன. இப்படி வெளிப்படும் கந்தகத்தின் அளவு 2000 ஆம், ஆண்டில் 6,500 கிலோ டன்னிலிருந்து 2010 ஆம் ஆண்டுக்குள் 10,900 கிலோ டன்கள் வரை அதிகரிக்கும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளால் காற்றில் கலக்கும் கந்தகத்தின் அளவு 30 விழுக்காடு அதிகரிக்கும்! 
நீரில் கலந்திருக்கும் பி.ஹெச். அளவு (நீரில் கலந்திருக்கும் ஹைட்டிரஜன் அயனிகள் அளவு) 5.6 க்கும் கீழாக குறைந்துவிட்டால்… அதை அமில கலப்பு உள்ளதாகவே கருத முடியும். 
பெங்களுரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ஓர் ஆய்வில் நிபுணர் குழுவாக இணைந்து 1996-1998 இடைப்பட்ட காலத்தில் நகரின் பத்து இடங்களில் 561 மழை நீர் மாதிரிகளை (சாம்பிள்ஸ்) சேகரித்து சோதித்தார்கள். அப்போது, சராசரியாக பி.ஹெச்சின் அளவு 5.22 ஆக இருப்பதைக் கண்டார்கள். இதே நிலைமை நீடித்தால் 2012 க்கு மேல் பெங்களுரு மிக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்கள்.                  இந்த அமில மழைக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றும் பொறுப்புடையவை என்று உறுதியுடன் கூறலாம்.

              1993 இல், மட்டும் அமெரிக்கா 90 மில்லியன் பவுண்ட் எடையுள்ள சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடுகளை வெளியேற்றியுள்ளது. இந்த நச்சுக் கழிவு காற்றில் கலந்து மேகக் கூட்டத்தை அடைந்ததையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர். மழை வழியே பூமியை அடையும் இந்தக் கொடிய அமிலம் நீர் நிலைகளை மாசு அடையச் செய்து மீன் போன்ற கடல்வாழ் உயிரிகளை பேரழிவு ஏற்படுத்தும் என்று 30 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டும் எந்தவிதமான எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும். ஆசியாவை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள நிலை நீடித்தால்.. சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1990 ஆம், ஆண்டுடன் ஒப்பிடும்போது, இன்னும் 10 ஆண்டுகளில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆசியாவில் 1990 இல், காற்றில் கலந்த சல்பர்-டை – ஆக்ஸைடின் அளவு 34 மில்லியன்  மெட்ரிக் டன்கள்!
தென் கிழக்கு சீனா, கிழக்கு இந்தியா, தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை அதி தீவிரமாக உருவெடுக்கும் என்று ‘வொர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட்,’ ‘யு.என்.டி.பி’, ‘யு.என்.இ.பி’ மற்றும் ‘உலக வங்கி’ ஆகியவை பிரசுரித்த ‘வொர்ல்ட் ரிசோர்ஸ் (1998-1999) அறிக்கை தெரிவிக்கிறது. 
உண்மையில். மனித குலத்தைச் சுற்றியும் நச்சு வாயுக்களால் நிரப்ப்பட்ட மாசு மேகங்கள் சூழ்ந்துள்ள விபரீதம் இது. அதனால், இதற்கான தீர்வு மிக முக்கியமானது.

  • அதிகமான புகையை வெளியிடாத வண்ணம் வாகனங்களை வடிவமைக்க வேண்டும்.
  • வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலை கெடுக்காத எரிப்பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், ஆசியாவில் 1990 இலிருந்து 2020 க்குள் எரிபொருள் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரிக்க இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
கடந்த முப்பதாண்டுகளில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மூன்று மடங்குக்கும் அதிகமாகப் பெருகியுள்ளது. இதன் காரணமாக ஏற்படும் நோய்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 4,500 கோடி செலவழிக்கிறார்கள் என்று உலக வங்கியின் அறிக்கைக் கூறுகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுவின் கோரப்பிடியில் சிக்கி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருவர் பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

காற்று, நீர், உணவு ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளாகும். இந்த மூன்றும் மாசாகிப் போனதால்.. உலகமே மயானமாகிப்  போகும் விபரீதம் உண்டு. இது சம்பந்தமாக நீதி மன்றங்களின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. நீதிபதிகளான வி.ஆர். கிருஷ்ணய்யர், ஜஸ்டீஸ் தேசாய் போன்றவர்கள் சட்ட ரீதியாக அரசுகள் மீது நிர்பந்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 
1970 ஆம், ஆண்டு கணக்கின்படி காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்கள் 23 விழுக்காடு வகித்துள்ளன. நமது நாட்டிலுள்ள 22 நகரங்கள் சூழல்மாசு பூதத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கிறது. ஆனால், இது சம்பந்தமாக அது எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
மனித குலத்துக்குப் பேராபத்து விளைவிக்க உலகைச் சூழ்ந்துவரும் சூழல் கேட்டைப் பாதியாக குறைக்கலாம் என்று உலக வங்கி கூறினாலும், அதற்காக ஆகும்  செலவு சுமார் 3,87,000  கோடிகள்! இது வளர்முக நாடுகளின் தலையில் விழும் என்பது முக்கியமானது. 
இந்த அதி தீவிரமான நிலையை குபேர நாடுகள் உணர்ந்து இதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும். சூழல் மாசுவை நீக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.
இந்த பூமிப் பந்து அனைவருக்கும் பொதுவானது. வருங்காலச் சந்ததிகளுக்கும் சொந்தமானது என்ற உணர்வோடு நடந்து கொள்வது ஒவ்வொரு தனிநபர் மீதுள்ள பொறுப்பாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக